இன்றைய தமிழ்ச் சினிமா உற்பத்தி என்பது பிரதானமாக, லாபத்தை நோக்கமாகக்
கொண்டு செய்யப்படும் பிற சரக்கு உற்பத்தியைப் போன்றதுதான் என்றாலும்
தமிழ்ச் சினிமா ஒவ்வொன்றும் தனது கச்சாப் பொருளாக சமூகத்தில் இருந்து
எடுத்துக் கொள்ளும் ‘பேசு பொருளை’ (கருத்துக் கொண்டு அவற்றைக்
கீழ்க்கண்டவாறு வகைப் படுத்தலாம்.)
தமிழ்ச் சினிமாக்களை பிரதானமாக இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று,
யதார்த்தவாதப் படங்கள் மற்றது கற்பனாவாதப்படங்கள். கற்பனாவாதப் படங்கள்
என்பவை யதார்த்த உண்மைகளைச் சிறிதும் கவனத்தில் கொள்ளாமல் கண்டதையும்
பேசுகின்றதும் தங்களது பைகளை நிரப்பிக் கொள்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு
தயாரிக்கப்படுவதுமான அபத்தக் குப்பைகள்.
யதார்த்த வாதப்படங்கள் எனும் போது அவற்றையும் இரண்டாக பிரித்துப்
பார்க்கலாம். ஒன்று, யதார்த்தத்தை விமர்சனப்பூர்வமாக அணுகும் படங்கள்
மற்றது யதார்த்தத்தை ஏற்றுப் போற்றும் படங்கள். அதாவது சமூக / பண்பாட்டுத்
தளத்தில் ஏற்பட்டு வருகின்ற மாறுதல்களை ஏற்காது மறுத்து சமூகத்தை அப்படியே
நிலை நிறுத்த விரும்பும் தேங்கிப் போன சிந்தனை கொண்ட படங்கள்.
சமூகத்தை விமர்சனப்பூர்வமாக அணுகும் படங்களையும் இரு விதமாக பிரிக்கலாம்.
ஒன்று, அடித் தட்டு மக்களது பார்வை மற்றும் தேவையின் அடிப்படையில்
விமர்சிக்கும், சமூகத்தில் மேலும் மாறுதலைக் கோரும் படங்கள் மற்றது கடந்த
ஆண்டுகளில் ஏற்பட்டு வந்திருக்கக்கூடிய மாற்றங்களை விமர்சித்து மீண்டும்
பழைய நிலைக்கே திரும்ப வேண்டும் என்று விரும்பும் உயர் வர்க்க / சாதிய /
ஆணாதிக்கப் படங்கள். இறுதியாக அடித்தட்டு மக்களது நலன் நோக்கில் பேசும்
படங்களையும் இருவிதமாக அதாவது சரியான தீர்வை நோக்கி இட்டுச் செல்லும்
படங்கள் என்றும் தவறான திசையை நோக்கித் திரும்பும் படங்கள் எனவும்
பிரித்துப் பார்க்கலாம்.
மேற்காணும் வரையறையை ஏற்றுக் கொண்டால் சமீபத்தில் சற்று வித்தியாசமான
பெயருடன் கரு.பழனியப்பன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘சிவப்பதிகாரம்’
எவ்விதமான படம் என்று நாம் எளிதாக முடிவு செய்ய முடியும்.
கதை
சென்னையில் நீண்ட காலத்தை (20, 25 வருடங்கள்) கழித்து விட்டு விருப்ப ஓய்வு
பெற்று தன் சொந்த ஊருக்கு (மதுரை மாவட்டம் ‘எரசை’ என்ற கிராமம்) தன் மகள்
சாருலதா (மம்தா - அறிமுகம்)வுடன் திரும்புகிறார் பேராசிரியர் இளங்கோ
(ரகுவரன்).
தமது கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாடப்படுகின்ற நாட்டுப்புறப்
பாடல்களை தொகுத்து வெளியிட விரும்பும் பேராசிரியர் அதற்கு உதவியாளர் என்ற
பெயரில் சத்தியமூர்த்தி (விஷால்) என்ற இளைஞரை அழைத்து தன்னுடன் வைத்துக்
கொள்கிறார். ஊராரும் நம்புகிறார்கள். சத்தியமூர்த்தியின் அறிவுத்திறன்
கண்டு சாருலதா காதல் வயப்படுகிறார். இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தல்
அறிவிக்கப்படுகிறது. பேராசிரியர் ஆலோசனையுடன் திட்டமிட்டு சத்தியமூர்த்தி
வேட்பாளர்கள் சிலரை தொடர்ந்து கொலை செய்கிறார். உயிர் பயத்தின் காரணமாக
வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெறுகிறார்கள். தேர்தல்
கமிசனால் தேர்தல் நிறுத்தி வைக்கப்படுகிறது.
எல்லோர் கவனமும் வேட்பாளர் கொலையின் மீது திரும்புகிறது. காவல்துறை
முடுக்கி விடப்படுகிறது. உளவுத்துறை அதிகாரி ரவீந்திரன் (அறிமுகம் -
உபேந்திரா லிமாயே) முயன்று கொலையாளிகளைக் கண்டுபிடிக்கிறார். பேராசிரியரை
காவல்துறை கைது செய்கிறது. தப்பும் சத்தியமூர்த்தியிடம் சாருலதா தன்
காதலைச் சொல்ல சத்தியமூர்த்தி தன் கடந்த கால வாழ்வை (பிளாஷ்பேக்)
விவரிக்கும் போது பார்வையாளரான நமக்கும் இக்கொலைகளுக்கான காரணம்
தெரியவருகிறது.
சென்னை லக்சிகன் கல்லூரி பேராசிரியரான இளங்கோவும் அவரது மாணவர்களான
சத்தியமூர்த்தியும் பிறரும் இணைந்து இடைத்தேர்தல் ஒன்றில் கருத்துக்
கணிப்பு எடுத்து வெளியிட அதையே தன் தோல்விக்கான காரணமாகக் கருதும் ஆளும்
கட்சி வேட்பாளர் சண்முகராஜா (சண்முகராஜா) போலீஸ் மந்திரி இளையபெருமாள்
வழிகாட்டுதலில் காவல்துறை உதவியுடன் கல்லூரிக்குள் நுழைந்து
சத்தியமூர்த்தியின் தந்தை (பியூன்) முத்துச்சாமி (மணிவண்ணன்) உட்பட 40 பேரை
எரித்துக் கொலை செய்கிறார். இதற்குப் பழிவாங்கத் துடிக்கும்
சத்தியமூர்த்தியை பேராசிரியர் தடுத்து, பொறுத்திருந்து பழிவாங்கும்படி
சொல்கிறார்.
இத்திட்டத்துடன் தான் இருவரும் கிராமத்திற்கு வந்தனர் என்று காட்சி
உணர்த்துகிறது. இறுதியாக காவல் துறை தேடலுக்கு நடுவே சத்தியமூர்த்தி
மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாக் கூட்டத்தின் மத்தியில் தன்
நண்பர்களது உதவியுடன் அமைச்சர் இளையபெருமாளை கொலை செய்கிறார். காவல்துறை
சுற்றி வளைக்க அவர்களுக்கு நடுவே நின்று சாமி கும்பிட வந்த மக்களிடம்
தேர்தலில் பங்கேற்கும் வேட்பாளர்களது தகுதி பற்றி கேள்வி எழுப்பும் நாயகன்
இறுதியாக தேர்தல் முறையை மாற்றியமைக்க ‘ஏதாவது செய்யணும் சார்’ என்று
கூறுவதுடன் படம் முடிகிறது.
***
இப்படம் நிலவுகின்ற அரசியல் அமைப்பு முறையின் மீது குறிப்பாக தேர்தல்
முறையின் குறைபாடு பற்றி தன் விமர்சனத்தை முன்வைக்கிறது. வேட்பாளர்களுக்கு
என்று குறைந்த பட்ச தகுதி வேண்டாமா? என்ற கேள்வி எழுப்புகிறது.
இக்கேள்வியின் நியாயத்தை பார்வையாளர் உணரும்படியான காட்சிகளும், உரையாடலும்
படத்தில் ஆங்காங்கே அடுக்கப்பட்டுள்ளன. இவை சமூக உண்மைகளில் இருந்தே
தேர்வு செய்யப்பட்டுள்ளன. வசனங்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளது
பாத்திரங்களின் சுயஒப்புதல்களாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன. திருடர்கள்
தங்களுக்குள் பேசிக்கொள்ளும் பாணியில்.
இன்றைய தேர்தலில் பணம், சாராயம், பிரியானிப் பொட்டலம் வகிக்கும் பங்கு
பற்றியும், ஓட்டொன்றுக்கு ரூபாய் 1000 வரை கொடுக்கப்படுவது பற்றியும் படம்
பேசுகிறது. இன்றைய (தேர்தல்) அரசியல்வாதிகள் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற
வேறுபாடின்றி அனைவரும் தங்கள் சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும்
நேர்மையற்ற திருடர்கள், ஏமாற்றுப் பேர்வழிகள் என்று பார்வையாளருக்கு
உணர்த்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தமது கட்சியின் இரண்டாம்
கட்டத் தலைவர்களுடன் ரகசியமாக உரையாடும் காட்சிகள் (தேர்தல்)
அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிப்பதாக அமைந்துள்ளது. இவ்வாறான காட்சிகள்
எல்லாம் பார்வையாளர்களுக்கு ‘தேர்தல் முறையும், அரசியல்வாதிகளும்
சீரழிந்துபோய் விட்டனர்’ என்று படம் பிடித்துக் காட்டினாலும் தேர்தல்
அரசியல் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி தேர்தல் புறக்கணிப்புக்கும்,
வன்முறை வழிப்பட்ட போராட்ட முறைகளை நோக்கியும் பார்வையாளரது கவனம்
சென்றுவிடாதவாறு மிக எச்சரிக்கையுடன், தேர்தல் முறையை சீர்திருத்தி நிலவும்
அரசியல் அமைப்பைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. அத்துடன்
தேர்தல் முறையை சீர்திருத்தி காப்பாற்றுவதற்காக ஆயுதத்தை (வன்முறை)
எடுப்பதையும் கொலை புரிவதையும் கூட சரியென்கிறது ‘சிவப்பதிகாரம்’.
பெரிய தயாரிப்பு நிறுவனங்களும், பெரிய ஸ்டார்களும் இணைந்து தமிழ்ச் சினிமா
சரியான திசைவழிக்குத் திரும்பி விடாமலும், மக்கள் மனதில் பழமை நஞ்சை
மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்து கொண்டும் இருக்கும் சூழலில் நிலவுகின்ற
சமூக, அறிவியல் அமைப்பின் மீது கேள்வி எழுப்பவும், விவாதத்தைத் தூண்டவும்
வாய்ப்பு ஏற்படுத்தும் ஒவ்வொரு படமும் வரவேற்கத்தக்கதே. ஆனால்
கரு.பழனியப்பன் எழுப்புகின்ற கேள்விகளின் பின்புலமும், அவர் சொல்கின்ற
தீர்வும் விமர்சனத்திற்குரியதாக இருக்கிறது.
சிவப்பதிகாரம் இயக்குனர் ஒரே ஒரு முரண்பாட்டை மட்டுமே பேசுபொருளாக
எடுத்துக் கொண்டுள்ளார். அதாவது (கெட்ட) அரசியல்வாதிகளுக்கும் மக்கள்
இடையேயுள்ள முரண்பாட்டை மட்டுமே எடுத்துக் கொண்டு இப்பிரச்சனையை எப்படித்
தீர்க்கலாம் என்பதற்கு பல யோசனைகளை நாயகன் வாயிலாகச் சொல்கிறார். உதாரணமாக
ஒரு தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள் எவரையும் மக்களுக்குப் பிடிக்கவில்லை
என்றால் மாவட்ட ஆட்சித் தலைவரே M.L.Aவாக செயல்படுவது என்ற தீர்வை
முன்வைக்கிறார். கலெக்டர்களிலும் நல்லவர் கெட்டவர் உண்டு என்பதை
கரு.பழனியப்பன் எப்படி மறந்தார் என்று தெரியவில்லை. அதேபோல் தன்னைக் கைது
செய்ய வரும் காவல்துறை அதிகாரி ரவீந்திரனிடம் பேரா.இளங்கோ
‘சத்தியமூர்த்தியை கொலைகாரனாக மாற்றிய இச்சமூகம்தான் வெட்கப்படணும்’ என்று
கூறுகிறார்.
கெட்ட அரசியல்வாதிகளை உருவாக்கியதும் இச்சமூக (ஏற்றத் தாழ்வான - சுரண்டும்)
அமைப்புத் தான் என்று ஏன் புரிந்து கொள்ள மறந்துவிட்டார் என்று
புரியவில்லை. மக்களுக்கு ‘ஏதாவது செய்யணும்’ ‘கருத்துச் சொல்லணும்’ என்று
வருகின்ற இயக்குனர்களது அரை குறையான புரிதல் மேலும் சிக்கலையும்
குழப்பத்தையும் சமூகத்திற்கு வழங்குகிறது.
இங்குள்ள அரசு, அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் சாதிய வர்க்க
ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட இச் சுரண்டல் சமூக அமைப்பை கட்டிக்
காப்பதற்கானவர்கள் தான். அத்துடன் நிற்காமல் தாங்களும் அச்சுரண்டல்
பணத்தில் கொஞ்சத்தை (லஞ்சம், ஊழல் என்று பேரம் பேசி) அனுபவிக்க முயலும்
போது அரசு கைது விசாரணைக் கமிசன் என்று நடவடிக்கை எடுக்கிறது. சம்பளத்தை
மட்டும் வாங்கிக் கொண்டு சேவை செய்யும்படி அரசு சொல்கிறது. இந்த ஆளும்
வர்க்கத்திற்கான சேவையை மக்களுக்கான சேவை என்று பொய்ப்பிரச்சாரம்
செய்கிறது. இதனைத்தான் இயக்குனர் கரு. பழனியப்பன் நம்புகிறார், சொல்கிறார்.
பெரும்பாலான தமிழ்ச் சினிமாக்களைப் போலவே இதிலும் கிராமம் அழகும் அமைதியும்
தவழும் பூமியாகக் காட்டப்பட்டுள்ளது. ஒருபுறம் வெள்ளுடை தரித்த கிராமத்து
பெரிய மனிதர்கள் டீக்கடை பெஞ்சுகளில் அரசியல் நிலை குறித்து அங்கலாய்த்துக்
கொண்டிருக்க மறுபுறம் உழைக்கும் அடித்தட்டு மக்கள் களத்து மேடுகளில்
(நாட்டுப்புற) காதல் பாடல்களை பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பெரிய மனிதர்களுடன் அரசியல் பேசும் பேராசிரியர் உழைக்கும் மக்களது பாடல்
(காதல் பாடல்)களைப் பதிவு செய்து புத்தகம் போடுகிறார். அந்த மட்டும்
இருக்கிறது அவரது உறவு. சத்தியமூர்த்தியும் அவரும் மொட்டை மாடி, திராட்சைத்
தோட்டம் என்று மறைந்து மறைந்து அவரது மகளுக்குத் தெரியாமல் (ஆமாம் அவரது
மகள் பொம்பளை தானே அரசியல் பற்றி என்ன தெரியும். காதல் கல்யாணம் என்பதைத்
தவிர) தங்களது கிரிமினல் அரசியலைப் பேசுகிறார்கள்.
ஆனால் இறுதிக்காட்சியில் மட்டும் மக்களிடம், ராணுவத்திற்கு தன் பிள்ளையை
அனுப்பியவரை M.L.A ஆக்கலாமா? அல்லது 2 முறை M.L.Aவாக இருந்தவரை
மந்திரியாக்கலாமா? என்று குழப்பிக் குழப்பி கேள்வி கேட்கிறார் நாயகன்.
ஆனால் இறுதிவரை வெகுமக்களிடம் அதிகாரம் வந்து சேர்வது பற்றிய அறிவோ ஆசையோ
படத்தில் எவருக்கும் இல்லை.
மாறாக முன்னாலே எல்லாம் சரியாக இருந்தது இன்னைக்கு சீரழிஞ்சு போச்சு என்பதே
கிராமத்து மீசைகள் பேசும் பேச்சாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ‘காந்தி
அன்னைக்கு அரசியலுக்கு அழைத்தபோது நல்லவர்கள் எல்லாம் வந்தார்கள்
கெட்டவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள், இன்னைக்கு நல்லவர்கள் ஒதுங்கிக்
கொண்டார்கள், கெட்டவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து விட்டார்கள்’.
இதுதான் படத்தின் மையமான குரல் ‘அன்னைக்கு எல்லாம் சரியா இருந்துச்சு,
இன்னைக்கு கண்டவனும் வந்து எல்லாம் கெட்டுப் போச்சு’. இது யாருடைய குரல்?
நிலவுகின்ற சமூக - அரசியல் அமைப்பின் இயங்குமுறையின் உபவிளைவுகள் தான்
சீரழிந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தாதாக்களும், உழைக்கும் மக்கள்
மத்தியில் தோன்றியுள்ள துரோகிகளும் இன்ன பிறவும். இவற்றால் பாதிக்கப்படும்
வெகுமக்கள் பார்வையில், காரணத்தைத் தேடினால் பிரச்சனைக்களுக்கான மூலத்தைக்
கண்டு தீர்த்து புதிய சமூகத்தைப் படைக்க முடியும். மாறாக உயர் வர்க்க
சாதியக் கண்ணோட்டத்தில் அணுகும் போது அது கைது, விசாரணைக் கமிசன் என்று
கண்துடைப்பாகவோ, ‘என்கவுண்டர் சாவு’ என்றே தற்காலத் தீர்வாகவோ தான்
முடியும்.
நிகழ்கால சீரழிவுகளுக்கு கடந்த காலத்தின் பங்கை அடையாளம் காணாமல் கடந்த
காலத்தை சிறப்பாகக் காணும் ‘பழமைப் பற்றே’ கரு.பழனியப்பனது சிந்தனையின்
எல்லையாக இருப்பதால் இன்றைய அரசின் மேல்காணும் நடவடிக்கைகளைத் தாண்டிச்
செல்ல அவரால் முடியவில்லை. இக்கண்ணோட்டமே சாருலதா (நாயகி)-வின் பாத்திரத்தை
கண்டதும் காதல், கல்யாணம் என்ற பிற தமிழ்ப் படங்களைப் போலவே சுருக்கி
விட்டதுடன் படத்தில் தர்க்கங்களுக்கு உட்படாத பல்வேறு அபத்தங்களையும்
கொண்டுவந்து சேர்த்துவிடுகிறது. படத்தின் தலைப்பை ‘சிவப்பதிகாரம்’
என்பதற்கு பதிலாக ‘வெள்ளையதிகாரம்’ என்று வைப்பதே பொருத்தம்.
No comments:
Post a Comment