Friday 21 October 2022

திராவிட இயக்க அரசியல் வெறுப்பு அரசியலா?

 


பார்ப்பனர்களது சமூக அரசியல் கண்ணோட்டம் எப்போதும் பிறர் மீதான வெறுப்பையே அடித்தளமாகக் கொண்டு இயங்குவதை நாம் அறிவோம்.


ஆனால் அந்தப் பார்ப்பனர்களை விலக்கி கட்டமைக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாத இயக்கத்தின் அரசியலோ அனைவரின் மீதான விருப்பு என்பதாகவே அமைந்திருந்தது வரலாற்று முரணும்  உண்மையுமாகும்.


ஆம் திராவிட இயக்கத்தின் அரசியல் எப்போதும் விருப்பு அரசியல் ஆகும். இன்று இதன் மறுபெயர் inclusive policy என்பதாகும். இதுதான் பார்ப்பனியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையிலான அடிப்படை வேறுபாடாகும்.


நம்மை காலங்காலமாக ஒடுக்கியவர்களையும் வெறுத்து ஒதுக்கியவர்களையும் சுரண்டியவர்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி பற்றிச் சிந்திப்பதுதான் திராவிடச் சிந்தனை முறையாகும்.


ஒருபோதும் பழிவாங்கும் அரசியலை திராவிட இயக்கம் மேற்கொண்டதில்லை என்பதும் பார்ப்பனியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையிலான மிக முக்கியமான வேறுபாடுகளில் ஒன்றாகும்.


அவ்வாறாயின் ஏன் பார்ப்பனர்களை விலக்கி பார்ப்பனரல்லாதார் என்ற பெயரில் இயக்கம் அமைத்தனர்? என்ற கேள்வி எழலாம். தொடர்ந்து இன்று வரை திராவிடர் கழகத்தில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகளில் பார்ப்பனர்களை இணைத்துக் கொள்ளாமல் ஏன் விலக்கி வைக்கின்றனர்? என்ற கேள்வியும் எழுப்பப்படலாம்.


பார்ப்பனியத்தை வீழ்த்தி ஓர் சமத்துவ சமூகத்தைப் படைப்பதற்கு, பார்ப்பனியத்தைப் படைத்தவர்களும், பார்ப்பனியத் தத்துவத்தால் நூறு சதவீதம் பயன் அடைபவர்களும் இன்றுவரை தொடர்ந்து பார்ப்பனியத்தைக் கட்டிக் காக்கப் போராடுபவர்களுமாக இருப்பவர்களான பார்ப்பனர்களை , பிறப்பால் மட்டுமல்லாமல் சிந்தனையாலும் செயலாலும் பார்ப்பனர்களாக இருப்பவர்களும் அதற்காக பெருமிதம் கொள்பவர்களுமான பார்ப்பனர்களை பார்ப்பனிய எதிர்ப்பு சமத்துவப் போராட்டத்தில் எவ்வாறு இணைத்துக் கொள்ள முடியும்? (பார்ப்பனர்களாகப் பிறந்திருந்தாலும் பார்ப்பனியத்தை எதிர்ப்பவர்களை திராவிட இயக்கம் நண்பர்களாக நடத்திவருவதற்கும் நிறைய எடுத்துக்காட்டுகள் உண்டு)


அவ்வாறு  பார்ப்பனர்களை திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொள்வது கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்துக் கட்டியது போலாகாதா? என்பதால் தான் அவர்களை விலக்கி வைக்க வேண்டியுள்ளது. 


மற்றபடி பிரஞ்சுப் புரட்சியின் போது எதிர்ப் புரட்சியாளர்களான  மன்னர்களை கொன்றொழித்தைப் போன்றோ, அல்லது ரஷ்ய சோசலிசப் புரட்சியின் போது ஜார் மன்னனையும் பிறகு முதலாளிகளையும் ஒழித்துக் கட்டியது போன்றோ அல்லது சீனாவின் புதிய சனநாயகப் புரட்சிக் காலத்தில் நிலப்பிரபுக்களை அழித்தொழித்தது  போன்றோ  தமிழ்நாட்டில் ஒரு போதும் திராவிட இயக்கம் பார்ப்பனர்களை ஒரு சதவீதம் கூட நடத்தியதில்லை. 


மாறாக அவர்களது நியாயமான நலனையும் உள்ளடக்கி சிந்திக்கவும், அவர்களுக்குரிய பங்கை வழங்கவும் செய்தது தான் திராவிட இயக்க ஆட்சியின் சிறப்பாக இருந்தது. திராவிட இயக்கம் பார்ப்பனர்களின் ஏகபோகமான  அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் வன்முறையற்ற வழியில்  உடைத்து அனைவருக்கும் அனைத்தும் என்ற சமத்துவக் கொள்கையை நடைமுறைப் படுத்தியது.


இந்த அனைவருக்கும் அனைத்தும் என்ற சமத்துவ , சமூகநீதிக் கொள்கையை எதிர்த்து வழக்குத் தொடுப்பவர்களாகவும் , போராடுபவர்களாகவும், அவதூறு, வெறுப்புப் பிரச்சாரம் செய்பவர்களாகவும் இன்றளவும் பார்ப்பனர்களே உள்ளனர் என்பதை சமகால வரலாறு பதிவு செய்துள்ளது.


இவ்வாறு பிற (பார்ப்பனரல்லாத) ஜாதியினருக்கு (கல்வி,வேலை, அர்ச்சகராகும் உரிமை போன்ற) எதையும் பங்கிட்டுத் தரக் கூடாது என்று வெளிப்படையாக பேசுபவர்களாகவும் அவர்களுக்கு அதற்கான தகுதி இல்லை என்று ஆணவமாகப் பேசக் கூடியவர்களாகவும் பார்ப்பனர்கள் இருப்பதையும் நாம் பார்க்கிறோம்.


இவ்வாறு தங்களைத்தவிர இந்நாட்டில் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களை முட்டாள்களாகவும் , இழிபிறவிகளாகவும் இன்றளவும் கருதவும் அறிவிக்கவும் செய்யும் பார்ப்பனர்கள் முன்வைக்கும் (சனாதன) அரசியலே மனிதகுல வெறுப்பு அரசியலாகும்.


மாறாக காலமெல்லாம் தம் மீது நஞ்சைக்கக்கி வரும் பார்ப்பனர்களது நலனையும் மறுக்காமல் அதேசமயம் பெரும்பான்மை பார்ப்பனரல்லாத மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் திராவிட இயக்கம்  முன்வைக்கும் அரசியல் மக்கள் விருப்பு அரசியலாகும்!

No comments:

Post a Comment