Friday 21 October 2022

தமிழ்ச் சினிமா~பாகுபலி முதல் பொன்னியின் செல்வன் வரை மீண்டும் பொ(க)ற்காலம் நோக்கி!

தமிழ்ச்சினிமாவின் இயங்குதலை அதன் சமகால சமூக அரசியல் நிலவரத்துடன் இணைத்துப் புரிந்து கொள்ளவும் விளக்கவும் முயற்சிப்பது சரி என்று கருதுகிறேன்.

அவ்வாறே கடந்த காலத்தில் சுதந்திரப்போராட்ட கால சினிமா(1931-1947) திராவிட இயக்க கால சினிமா(1947-1967)நக்சல்பாரி இயக்க கால சினிமா(1967-1985) , இந்துத்துவ நிலவுடமைப் பண்பாட்டு மீட்டுருவாக்க சினிமா (1984-2005) என்று பலரும் வகைப்படுத்தி உள்ளதையும் ஆய்வு செய்துள்ளதையும் நாம் பார்க்கலாம்.

அதன் தொடர்ச்சியாகத் தான் சமகால சினிமாக்கள் பல இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கார்ப்பரேட் எதிர்ப்பு, நவீன தொழிற்துறை எதிர்ப்பு போன்றவற்றை முன் வைத்து கிராமப் புறங்களைப் போற்றிப் புகழ்ந்து திரைப்படங்களை எடுப்பதைப் பார்க்கும் போது ஜல்லிக்கட்டு போராட்டம் , மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம்,  மறைந்த நம்மாழ்வார்  போன்றவர்களின் தொடர் பிரச்சாரம் மற்றும் சீமானின் தாக்கம் கொண்ட உதவி இயக்குனர்கள், இயக்குனர்கள் திரைத்துறையில் கணிசமாக உள்ளனர் என்பதையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.

மற்றொரு புறம் இந்திய அளவில் பிற மொழிகளில் இந்துத்துவப் பின்னணியில் மன்னர்கால திரைப்படங்களை தொடர்ச்சியாக எடுத்து (பாகுபலி-ஆதிபுருஷ்) அவை வரவேற்பைப் பெறும் போது தமிழ்ச்சூழலில் அதற்கே உரிய தனித்துவமான தமிழ்(இந்து) ப்பெருமித வடிவில் மன்னர்காலத் திரைப்படங்களை  எடுக்கத் துவங்கி உள்ளனர்.

இதன் வெளிப்பாடுதான் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வெற்றிவேல் வீரவேல் என்ற அரசியல் முழக்கம் இட்டதுமாகும்.(எல்.முருகன்+சீமான் வேல் ஊர்வலத்தை நினைவில் கொள்ளவும்) .

இப்போது , தனது அரசியலை கைப்பற்றி மற்றவர்கள் (மணிரத்னம்) பொருளாதாரத்தையும் புகழையும் குவிப்பதைக் கண்ட சீமான் தானே நேரில் களமிறங்கத் திட்டமிட்டு அறிவிப்பும் செய்துவிட்டார். அதற்கு வெற்றிமாறனும் உடன்போகிறார் என்பது வெற்றிமாறனின் அகப் போராட்டம் , ஊசலாட்டம் முற்றுப் பெற்று அவரது பயணத்தின் (தமிழ் இந்து) திசை முடிவாகிவிட்டதையே இந்த அறிவிப்பு காட்டுகிறது.

இந்த டிரெண்ட் இத்திசையில் இன்னும் பலரையும் இழுத்துவிடும் . இது சீமான் போன்றவர்களின் பொருளாதாரத்தை+புகழை  மட்டுமல்ல நாம்தமிழரின் இனவாத ஜாதிய அரசியலையும் தமிழ் சமூகத்தில் வளர்க்கும் என்பதை  புரிந்து கொள்ள வேண்டும். இது ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த சங்கிலியைப் போன்றது. சமூக அரசியல் யதார்த்தம் சினிமாவில் தாக்கம் செலுத்துவதும் மீண்டும் சினிமா சமூக உளவியலை கட்டமைப்பதும் என்பது ஓர் தொடர் செயல்பாடாகும்.

இந்த வளர்ச்சி திராவிட இயக்க வெறுப்புக் கொண்ட அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று. திராவிடத்தை ஒரு நூற்றாண்டு காலமாக அழிக்க முடியாது தோற்றுப்போன பார்ப்பனியம் தமிழையும் தமிழ்தேசியத்தையும்  கையில் ஏந்தி திராவிடத்தை தோற்கடிக்க முயற்சித்து தோற்றுப் போனதும் (மா.பொ.சி, ஆதித்தனார்) கடந்தகால வரலாறு ஆகும்.

இப்போது புதிய முயற்சியாக தூய தமிழ் ஜாதிப்பெருமிதத்தையும் அழிந்து கொண்டிருக்கும் நிலவுடமைப் பண்பாட்டையும் கலந்து தமிழ்(இந்து) தேசியமாக முன்வைத்து அதற்குத் துணையாக தமிழர் பாரம்பரியம் , தமிழர் பண்பாடு, தமிழர் கலை, தமிழர் இசை, தமிழர் விளையாட்டு, தமிழர் வழிபாடு,  தமிழர் வீரம் என்று கட்டமைக்கின்றனர். இந்தக் கட்டமைப்புக்குள் பார்ப்பனர் உள்ளிட்ட பல்வேறு ஜாதிகளையும் அவர்களது பெருமிதங்களையும் இணைக்கின்றனர்.

அதே நேரம் குறிப்பிட்ட சில சிறுபான்மைச் ஜாதிகளையும் இசுலாமியர்களையும் கிறிஸ்தவர்களையும்  மட்டும் தனியே பிரித்து தமிழ் தேசியத்தின் எதிரிகளாக நிறுத்துகின்றனர். இது திராவிடம் கட்டமைத்த மனிதப்பற்று மிக்க சனநாயக பகுஜன் (inclusive policy) அரசியலுக்கு நேர் எதிரான வெறுப்பு அரசியலாகும். வன்முறையும் கலவரமும்  ரத்தவெறியும் இதன் அடிநாதமாகும். 

பாகுபலி துவங்கி பொ.செ வரை இந்த மனித  ரத்தம் பீச்சியடிப்பதை ரசனைக்குரிய ஒன்றாக கிளர்ச்சியூட்டும் ஒன்றாக காட்சி ஆக்குவதை நாம் பார்க்க முடியும். இதுவே வன்முறையற்ற வழியில் சமத்துவம் படைக்கும்  திராவிட இயக்க அரசியலுக்கும் தமிழ் (இந்து) இன அரசியலுக்கும் இடையில் உள்ள வேறுபாடாகும்!

No comments:

Post a Comment