Thursday 27 October 2022

மனிதர்களும் கொண்டாட்டமும்

மனிதனும் கொண்டாட்டமும் !

மனிதர்கள் (நான்கு கால்) விலங்குகள்  அல்ல! விலங்குகள் உடலால் வாழ்கின்றன. மனிதர்களோ முதன்மையாக மனதால்(சிந்தனையால்) வாழ்கின்றனர்.

அதாவது விலங்குகள் உடல் தேவையால் உந்தப்பட்டு அதை நிறைவு செய்யும் பொருட்டு இயங்குகின்றன. பசிக்காமல் அவை ஒரு போதும் உணவைத் தேடுவதில்லை. எறும்பு, தேனி போன்றவற்றின் உணவு சேமிப்பு மற்றும் சிலந்தி வலை பின்னுதல், பறவைகளின் கூடு கட்டல் எல்லாமும் கூட அவற்றின் அநிச்சையான உடலியக்கத்தின் ஒரு பகுதிதான்.

விலங்கினங்கள் விளையாடுவதும் கூட வயிறு நிறைந்தவுடன் ஏற்படும் குசியின் ஓர் அங்கமாகவோ அல்லது பாலியல் தூண்டலின் ஓர் அங்கமாகவோ அல்லது எதிரியுடன் சண்டையிடுதல் அல்லது வேட்டையின் முன்மாதிரியான ஒன்றாகவோ தான் அமைகின்றனவே தவிர அவை முன் கூட்டியே திட்டமிட்டு நடத்தப்படுபவையல்ல.

அவ்வாறு தான் ஆதிமனிதர்களும் வேட்டையில் போதுமான உணவு கிடைத்து  தங்கள் வயிறு நிறைந்த பிறகு கூடி, ஆடி மகிழ்ந்திருப்பர்.

வேட்டைச் சமூகமாக வாழ்ந்த ஆதிகால (குறிஞ்சித்திணை) மனிதர்களிடமும் காணப்பட்ட இதே போன்ற தன்மைகள் மனிதகுலத்தின் வளர்ச்சிப் போக்கில், மனிதர்கள் பொருள் உற்பத்தியில் ஈடுபட்டு (மருதத்திணை) உபரி அதிகரித்த பிறகு ஆட்டம் பாட்டம் விளையாட்டு எல்லாம் உடல் தேவையில் (வயிற்றில் ) இருந்து பிரிந்து மனம்(சிந்தனை) சார்ந்து இயங்க ஆரம்பித்திருக்கும்.

நவீன எந்திரக் கண்டுபிடிப்புகள் அவற்றின்  வளர்ச்சி, தொழிற்புரட்சி காலத்திற்குப் பிறகு இந்த இடைவெளி அதாவது உடலுக்கும் மனதிற்குமான இடைவெளி அல்லது மனதின் (சிந்தனையின்) ஆதிக்கத்தின் கீழ் உடல் அடிமைப்படுத்தப்படுவது அதிகரித்தது என்றே கூறவேண்டும்.

இன்றைய மனிதரின் தேவை என்பது முதன்மையாக அவர்களது உடல் சார்ந்தது அல்ல! முற்றிலும் மனம் சார்ந்த ஒன்று தான்! அவர்களது மனத்தேவைகளுக்கு ஈடு கொடுப்பற்கு ஏற்ப செயல்பட வேண்டி  உடலின் மீது வன்முறையை ஏவுகின்றனர்.

இதுவரையிலான முதலாளியத்திற்கு முந்தைய  சமூக அமைப்புகளில் (புராதனப் பொதுவுடமை, ஆண்டான் அடிமை, நிலவுடமைச் சமூகங்கள்)  இருந்து வந்த உடலின் வலிமை/ செயலாற்றல் படிப்படியாக குறைந்து வந்து (அழிந்து வந்து )உடம்பும் கையும் கால்களும் சூம்பிப் போய்விட்டன. அல்லது ஊதிப்பெருத்து விட்டன. அதே நேரம் கண் காது மூளையின் இயக்கம் மட்டும் அதிகரித்து விட்டது! (செவிக்கும் கண்களுக்கும் உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்)

வேட்டைச் சமூகத்தின் மனித உடல் அமைப்பினை  நினைவூட்டும் ஆணழகன்கள்/அழகிகள் என்போர் தொழில் முறையாக தனித்து உருவாகிவிட்டனர். அதே போல விளையாட்டு வீரர்கள் என்போரும் தனியாக உருவாகிவிட்டனர். மற்ற பெரும்பாலானவர்கள் அனைவரும் பார்வையாளர்களாக மாறிப்போய் விட்டனர்.

முதலாளித்துவத்தின் உச்சம் பொருள் உற்பத்தியில் வேலைப் பிரிவினையை அதிகப்படுத்தியது மட்டுமல்ல  மனிதர்களையும் துறைசார்ந்தவர்களாக கூறு போட்டுவிட்டது! ஒரு துறைசார்ந்த நிபுணர் அதற்கு வெளியே மற்ற விசயங்களில் பூஜ்யமாக ஆக்கப்பட்டுவிட்டார்! 

எவ்வாறு ஒரு மோட்டார் வாகனத்தின் உதிரிப்பாகங்கள் உலகின் வெவ்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுவதன் காரணமாக அந்த நவீன எந்திர உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு  அந்த மோட்டார் வாகனம் பற்றிய முழுமையான அறிவு இல்லாது போகிறதோ அதே போலவே இன்றைய மனிதர்கள் நிலவுடமைக்கால மனிதர்களின் தொழில்நுட்ப அறிவின் முழுமைத் தன்மைக்கு மாறான ,  பெரிய எந்திரத்திரம் ஒன்றில் பொருந்திய ஓர் திருகாணியைப் போலாகிவிடுகிறானர்.

II

இவ்வாறு இயற்கையான  உடற்தேவைகளின் அடிப்படையிலான மனித இயக்கமானது மனதால், சிந்தனையால், கருத்தியலால் வழிநடத்தப்படுவதாக / கட்டப்பட்டதாக மாறிவிட்ட போது மனிதர்களைக் கட்டியுள்ள அந்த கருத்தியல் சங்கிலியின் மறு முனையானது காலம் தோறும்  ஆண்டான், நிலப்பிரபு, முதலாளி என்று கைமாறி வந்தது. 

ஆனால் தமிழ்ச்சமூக அமைப்பிலோ அச் சங்கிலியின் மறுமுனையைப் பிடித்திருந்த இரு கைகளில் ஒன்று பார்ப்பனர்களுடையதாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது, வருகிறது. 

இன்றைய நவீன யுகத்தில் மனித உடம்பே, ஒருபுறம் கார்ப்பரேட் முதலாளிகளின், அவர்களது இந்தியக் கையாட்களான பனியாக்களின்  சந்தையாக/ குப்பைத் தொட்டியாக மாற்றப்பட்டுவிட்டதைக் காண்கிறோம். மறுபுறம் பார்ப்பனியத்தின் ஆடுகளமாகவும் மனித உடல் மாற்றப்பட்டுள்ளதையும் காணவேண்டியுள்ளது.

ஆம் மனிதர் உடல் இயக்கம் அவர்களது சிந்தனையால் வழிநடத்தப்படும் போது அச்சிந்தனையை பார்ப்பனியமும் பனியா(கார்ப்பரேட்)க்களும் கையகப் படுத்தி வழி நடத்துகின்றனர்.  

இன்றைய மனிதர்களின் ஒவ்வொரு உடற்தேவையும் கார்ப்பரேட் கம்பெனிகளாலும் அவற்றின் உள்நாட்டு முகவர்களான பனியாக்களாலும் நிறைவு செய்யப் படுகின்றன. 

அதே போல மருதத்திணைக்காலத்தில் இங்கு வந்து புகுந்த பார்ப்பனியம் அன்று தொட்டு இன்று வரை மனித பண்பாட்டு வாழ்க்கையை வழி நடத்தி வருவதையும் காண்கிறோம்.

இந்தப் பார்ப்பனியப் பண்பாட்டு மேலாதிக்கத்தால் அடிமையாக்கப்பட்ட மனித உடலும் மனமும் அதன் தேவைகளும் பனியா(கார்ப்பரேட்) முதலாளியத்தால் நிறைவு செய்யப்படுவதன் மூலம் இங்கு பொருளாதாரச் சுரண்டல் நடைபெற்று கார்ப்பரேட், பனியாக்கள் மேலும் மேலும் வளர்கிறார்கள்.

ஆக இத்தகைய சூழலில் கொண்டாட்டம் , திருவிழாக்கள் என்பவை வெறுமனே மனித மன மகிழ்ச்சி யோடு முடிந்து போகும் ஒன்றல்ல! அவை பார்ப்பனிய பனியா நலன்களுக்கான ஊற்றுக்கண்களாகவும் உள்ளன.

திருவிழாக்களில் பார்ப்பனிய ஆதிக்கத்தைப்  புரிந்து கொள்ளும் அளவிற்கு பனியா(கார்ப்பரேட்) சுரண்டலையும் நாம் புரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஆம் இன்று பண்டிகை நாட்களில் பயன்படுத்தப் படும் பல பொருட்கள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படுபவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

மனிதர்களின் அன்றாடத் தேவை (இதுவும் பார்ப்பனிய பனியாக்களால் கட்டமைக்கப்பட்ட மனித மனதால் தீர்மானிக்கப்படுபவைதான்) க்கான வீட்டு உபயோகப் பொருட்கள் மாத்திரமல்ல பண்பாட்டுத் தேவைக்கான பொருட்களையும் சீனக் கம்பெனிகளே தயாரித்து நமக்குத் தருகிறது என்பது உண்மையாகும்.

இந்திய அரசு நிறுவும் மாபெரும் சிலைகள் முதல் விநாயகர் சதுர்த்தி விழாவில் மக்கள் வீடுகளுக்கு வாங்கிச் செல்லும் சிறிய விநாயகர் பொம்மைகள் வரை அவை சீனத்தயாரிப்புத் தான். விபூதி, குங்குமம், ஊதுபத்தி சூடம் சாம்பிராணி முதல் ஸ்படிக, பவள, ருத்திராட்ச மாலைகள், கடவுளர் சிலைகள் , படங்கள் வரை அனைத்தையும் தயாரித்து அனுப்புகின்றனர்.

ஏற்கனவே சீனப்பட்டாசுகள் இங்கு வந்து ஆக்கிரமித்தது பற்றிய புலம்பல்கள் கேட்பதை நாம் அறிவோம். இந்தப் பட்டியல் மிக நீண்டது . ஆக பண்டிகைகள் கொண்டாட்டங்கள் என்பவை நமது மக்களின் மகிழ்ச்சி சார்ந்தவை மட்டுமல்ல. பார்ப்பன பனியா நலன் சார்ந்தவையுமாகும்.

III

இன்னொரு கோணமும் இந்தக் கொண்டாட்டங்கள் பின்னே உள்ளது! கொண்டாட்டங்கள் என்பவை அடிப்படையில் ஓர் கூட்டுச் சமூகச் செயல்பாடாகும். 

ஒரு காலத்தில் ஆதி காலத்தில் சமூக உறுப்பினர் ஒவ்வொருவரும் அதில் பங்கேற்பாளரே ஆவர். அப்போது பார்வையாளர் என்ற பிரிவினர் உணவு தேடலிலும்(வேட்டையிலும்) கிடையாது. கொண்டாட்டத்திலும் (ஆட்டம்பாட்டத்திலும்) கிடையாது.

வேலைப்பிரிவினையும் , உற்பத்தி நடவடிக்கைகளில் இருந்து சிலர் ஒதுங்கிக் கொண்டதும் அல்லது ஒதுக்கி வைக்கப்பட்டதும் அதேபோல ஆடல் பாடல் நடவடிக்கைகளில் இருந்தும் பலரை ஒதுக்கி வைத்துவிட்டு தொழில் முறைக் கலைஞர்களாகச் சிலரை இயங்க விட்டு பெரும்பான்மையோர் பார்வையாளர்களாக மட்டும் இருந்து ரசிக்கும் (ஆதி) மனிதப் பண்பாட்டுக்கு விரோதமான  நடவடிக்கை உண்மையில் மனித இயல்பின/இயற்கை மீதான வன்தாக்குதலாகும்.

நவீனம், நாகரீகத்தின் பெயரிலான இந்த வன்முறையில் இருந்து தற்காலிகமாக விடுதலை பெறும் வாய்ப்பை பண்டிகை களும், திருவிழாக் கொண்டாட்டங்களும் அனைவருக்கும் வழங்குகின்றன. மிக நீண்ட காலமாக அமுக்கப்பட்டுக் கிடக்கும் ஆதிகால வேட்கைகள் எல்லாம் பண்டிகை கூட்டத்தின் நடுவே கட்டவிழ்த்துக் கொண்டு பீறிட்டுக் கிளம்புகின்றன.

மீண்டும் ஒவ்வொரு மனிதரும் பங்கேட்பாளராகிறார்! பார்வையாளர் என்ற புனைவு உடைந்து நொருங்குகிறது. இந்தச் சுதந்திரம், விடுதலை வேட்கை தான் வறுமையையும், கடன் நெருக்கடிகளையும் மீறி பெரும்பான்மை மக்களை திருவிழாக்களின் பால் ஈர்க்கிறது.

இதனை சில எடுத்துக் காட்டுக்களின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். திரையரங்க இருட்டில் பார்வையாளர் கரைந்து உண்மையில் பங்கேற்பாளராக மாறும் மாயாஜாலம் நிகழ்கிறது திரைப்படத்தின் ஏதோ ஒரு கதா பாத்திரமாக மாறி 2.30 மணி நேரம் அழவும் சிரிக்கவும் கோபப்படவும் செய்கிறார். திரைத்துறையின் தேவையும் வெற்றியும் இதில் தான் அடங்கி உள்ளது.

இதேபோன்ற ஒன்றுதான் மேடைக்கச்சேரிகளின் போது பார்வையாளர்கள் சிலர்/ பலர்  எழுந்து நின்று ஆட்டம் போடுவதும்.

ஆக திருவிழா கொண்டாட்டங்கள் தேவையா? இல்லையா? என்பது அத்தனை எளிதாக முடிவு செய்து கொள்ளக்கூடிய ஒன்றல்ல! 

IV

உணவு தேடலோடும்,வேட்டையோடும், உற்பத்தியோடும் பின்னிப்பிணைந் திருந்த கொண்டாட்டங்கள் பார்ப்பனர்களின் வருகைக்குப் பிறகு கடவுளோடும், ஜாதி, மதச்சடங்குகளோடும் ஆணாதிக்கத்தோடும் படிப்படியாக இணைக்கப்பட்டு பல்வேறு புராணக் கதைகள் புனையப்பட்டு மாற்ற கூடாதவையாக நிறுவனமயப் படுத்தப் பட்டுவிட்டன.

கொண்டாட்டங்களின் பின்னிருந்த சமூக, உற்பத்தி மற்றும் உடலியல் தேவை சார்ந்த  அறிவியல்  காரணங்கள் எல்லாம் மறைந்து ஆன்மீகக் காரணம்/ தேவை  மட்டுமே மிச்சமாக உள்ளது.

எது எப்படி இருப்பினும் மனிதர்கள் விலங்குகள் அல்லவே உடலால் மட்டும் வாழ்வதற்கு!  அவர்கள் அவ்வப்போது அனுபவிக்கும் சிறு சிறு மன மகிழ்ச்சி தான் வாழ்வின் இலக்கு பற்றிய கற்பிதம் தான் அவர்களை இன்னும் உயிர்ப்போடு இயங்க வைக்கிறது. அவையும் இல்லை என்றால் அவர்கள் எப்போதோ கூட்டம் கூட்டமாக மடிந்து போயிருப்பார்கள்.

ஆகத் திருவிழாக் கொண்டாட்டங்களை நாம் முற்றிலும் வறட்டுத்தனமாக மறுதளித்து விட முடியாது.  மாறாக கடவுள் மத சமயச் சடங்குகளில் இருந்து துண்டிக்கப்பட்ட, சமூகச் செயலூக்கத்தை உசுப்புகிற தட்டி எழுப்புகிற புதிய கதைகளையும் காரணங்களையும் கொண்ட ,  சமூகம் முழுவதையும் பங்கேற்று ஆடிப்பாடி மகிழச் செய்யும் சமத்துவ திருவிழாக் கொண்டாட்டத்தை உருவாக்க வேண்டும்.

ஆனால் அது ஒன்றும் அத்தனை எளிதல்ல! அதில் இரண்டு வித சிக்கல்கள் உள்ளன. ஒன்று நாம் புதிதாக உருவாக்க முயற்சிக்கும் திருவிழாக்களையும் கொண்டாட்டங்களையும் கூட பார்ப்பனர்கள் தங்களது நலனுக்கானதாக மாற்றிக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக ஜனவரி புத்தாண்டு அன்று நள்ளிரவில் கோவில்களைத் திறந்து வைத்து சிறப்புத் தரிசனம் காட்டி சம்பாதிக்கும் நடவடிக்கையில் இறங்கி விட்டதையும்  பார்த்துவிட்டோம்.

மற்றொன்று தீபாவளிக்குப்பதிலாக தந்தை பெரியார் பிறந்த நாளை புத்தாடை அணிந்து  இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து பெரியார் இயக்கத் தொண்டர்கள் சிலர் கொண்டாடி வருவது. இது மக்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டப் பயன் பட்டதே தவிர பொது மக்களை கொண்டாட வைப்பதாக அமையவில்லை. 

ஆக பார்ப்பனர்களால் கையகப்படுத்த முடியாத, வெகுமக்கள் அனைவரும் விரும்பிப்  பங்கெடுக்கும் விதமான கொண்டாட்டங்களை, விழாக்களை நாம் புதிதாக உருவாக்க வேண்டும்.

அத்தகைய பதிலீட்டின் மூலமாகத்தான் இன்றைய பார்ப்பன பனியா நலனுக்கான கொண்டாட்டங்களில் இருந்து மக்களை விடுவிக்க முடியும். மாறாக வெறும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் மூலம் மட்டும் மக்களை திருவிழாக் கொண்டாட்டங்களில் இருந்து விடுதலை செய்ய இயலாது.

வேண்டுமானால் சிறுபான்மை எண்ணிக்கை கொண்ட பகுத்தறிவாளர்களான நாம் இந்த கொண்டாட்டங்களில் இருந்து தப்பிக்க தற்காலிகமாக எங்காவது ஓடி ஒளிந்து  கொள்ளலாம் ! 
@

No comments:

Post a Comment