Friday 21 October 2022

நடுநிலையும் பார்ப்பனர்களும்!

நடுநிலையும் பார்ப்பனர்களும்!

ஒருகாலத்தில் மணிமேகலைப் பிரசுரம் தமிழ்வாணன் அவர்கள் Master of all subject என்று தன்னைச் சொல்லிக் கொண்டு அனைத்துத் துறை சார்ந்த புத்தகங்களையும் எழுதி வெளியிட்டு வந்தார்.

ஒல்லியாக இருக்கும் நீங்கள் குண்டாக வேண்டுமா? அல்லது குண்டாக இருக்கும் நீங்கள் ஒல்லியாக வேண்டுமா? என்பது போன்ற தலைப்புகளில் எல்லாம் புத்தகங்களை வெளியிட்டதாக நினைவு.

அந்த மணிமேகலைப் பிரசுரத்தின் இடத்தினை கிழக்குப்பதிப்பகம் கைப்பற்றி உலகத்தில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங்கள், தலைவர்கள் பற்றி எல்லாம் கூட புத்தகங்களை வெளியிட்டதுடன் அவற்றை மளிகைக் கடைகளுக்கும் சப்ளை செய்து மசாலாப் பாக்கெட்டுகளுக்கு நடுவே தொங்கவிட்டது.

இந்தப் புத்தகங்களைப் படித்துவிட்டு உலக அரசியலைப் பற்றி பேசும் வல்லுனர்களும் உருவானார்கள். கிழக்குப்பதிப்பகத்தில் நம்மவர்கள்பலரும் சிறந்த சில புத்தகங்களை வெளியிடவும் செய்ததுடன் பத்ரி மிக நேர்மையான ஆள் மற்றவர்களைப் போல் இல்லாமல் ராயல்ட்டியை சரியாக கணக்கிட்டு கொடுத்து விடுவார் , எதைப்பற்றி  எழுதிக் கொடுத்தாலும் அவர் அப்படியே வெளியிடுவார் என்றனர். (மகாபாரதத்தை, சங்கரமடத்தைப் பற்றிய விமர்சனப் புத்தகங்களை அவர் வெளியிட்டுள்ளாரா என்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்)

இந்த நடுநிலை, நேர்மை என்ற இரண்டு விசயங்களில் தான் நம்மாட்கள் மயங்கிப் போய் கிடக்கின்றனர். தினமணி, இந்து, தினமலர், ஆனந்தவிகடன், துக்ளக், காலச்சுவடு எல்லாம்  அனைவருக்கும் பொதுவான நடுநிலைப் பத்திரிக்கைகள். ஆனால் முரசொலியும் விடுதலையும் ஒருபக்கச் சார்பான பத்திரிக்கைகள் என்று நம்பியே பார்ப்பனரல்லாத முட்டாள்கள் ஏமாந்து போனார்கள்.

அந்த விதமான கற்பிதங்களில் ஒன்றுதான் கிழக்குப்பதிப்பக பத்ரி பற்றிய நடுநிலை அரசியல் பிம்பமும். இப்போது வெளிப்படையாக அறிஞர் அண்ணா பற்றி இழிசொல்லை அவர் பதிவிட்டதும் தான் நம்மவர்களுக்குச் சொரணை வருகிறது.

தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாத மக்களே பெரும்பான்மை பார்ப்பனர்கள் மிக மிக குறைவான எண்ணிக்கை கொண்டவர்கள். ஆனால் அவர்களது நிறுவனங்களும், நிர்வாகமும் , தலைமையும்,  படைப்புகளும் எல்லோருக்குமானது என்ற பொதுப்புத்தியை ஏற்படுத்தி இருப்பதில் தான் பார்ப்பனியத்தின் வெற்றி அடங்கி உள்ளது.

இவ்வாறான பொதுவான அடையாளம் கொண்ட, அனைவரும் ஏற்றுப் போற்றுகிற ஓர் (ஆனந்தவிகடன் போன்ற) பத்திரிக்கையைக் கூட  நம்மால் கடந்த நூறு ஆண்டுகளில் நடத்த இயலாமல் போனது நமது தோல்வி என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

இனியாவது நடுநிலை, பொது, நேர்மை என்ற பெயரில் பார்ப்பனர்களையும் அவர்களது படைப்புகளையும் , பத்திரிக்கைகளையும், பதிப்பகங்களையும் தூக்கிச் சும்ப்பதை விட்டொழியுங்கள்!

No comments:

Post a Comment